குடும்ப தகராறில் விபரீதம்... மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்!

குடும்ப தகராறில், வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து, மனைவியை உயிரோடு கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (60). இவருடைய மனைவி கஸ்தூரி (52). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் வழக்கம் போல் நேற்றும் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன், வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து கஸ்தூரி மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் உடல் முழுவதும் தீ பரவி கஸ்தூரி அலறி துடித்தார். கஸ்தூரி மீது ஊற்றிய பெட்ரோல் நாகேந்திரன் மீதும் பட்டதில், அவர் மீதும் தீப்பற்றியது. உடனடியாக அவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். உயிரோடு கஸ்தூரி கொளுத்தபட்டதை அறிந்து அந்த பகுதி மக்கள் உடனடியாக ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கஸ்தூரி உடல் கருகி சடலமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரியாபட்டி போலீசார், நாகேந்திரனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கஸ்தூரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!