திருச்செந்தூரில் துயரம்... தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு சகோதரிகள் உயிரிழப்பு!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று வந்துள்ளார். மாலை நேரத்தில் திருச்செந்தூர் செல்வதற்கு முன்பாக, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஏரல் அருணாச்சல சுவாமி கோவிலுக்குத் தரிசனம் செய்யச் சென்றுள்ளனர்.
சங்கரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) ஆகிய இருவரும் சாமி தரிசனம் முடிந்த பிறகு, அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்று நீரைப் பார்த்த உற்சாகத்தில், உடன் வந்தவர்களுக்கு முன்பாகவே சிறுமிகள் இருவரும் வேகமாகச் சென்று ஆற்றில் குதித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கித் தத்தளித்துள்ளனர். சிறுமிகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக ஏரல் தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, ஒரு சிறுமியின் உடலை மீட்டனர்.

மற்றொரு சிறுமிக்குச் லேசான சுவாசம் இருந்ததைக் கண்ட மீட்புக் குழுவினர், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆற்றுப் பகுதியில் மணல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் அந்தச் சிறுமியைச் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கையிலேயே சுமந்து ஓடி வந்து, பின்னர் வாகனத்தில் ஏற்றி ஏரல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

முருகனைத் தரிசிக்க வந்த இடத்தில், கண் இமைக்கும் நேரத்தில் தங்களது இரு மகள்களையும் பறிகொடுத்த பெற்றோரின் கதறல் அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. ஏரல் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறுகளில் குளிக்கும் போது ஆழம் தெரியாமல் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளில் சிறுவர்களைப் பெற்றோர் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
