நண்பர்களுடன் குளித்தபோது சோகம்... தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி வட்ட கோவில் சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் விஜய் (21). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் இறுதியாண்டு படித்து வந்தார். சசிகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாயார் பராமரிப்பில் அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் விஜய் அவரது நண்பர்கள் 6 பேருடன் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை பகுதிக்கு வந்தார். அந்த தடுப்பணையில் நண்பர்களுடன் ஜாலியாக விளையாடி குளித்து கொண்டிருந்துள்ளார். நீச்சல் தெரியாத நிலையில் திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி மிக ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக நண்பர்கள் கரைக்கு திரும்பி அக்கம் பக்கத்தினர் மூலம் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பல மணி நேரம் தேடிய நிலையில், மாலை 6 மணிக்கு அவரது உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த நண்பர்கள் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. ஏரல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த தடுப்பணை பகுதியில் வெளியூரில் இருந்து ஏராளமானோர் குளிப்பதற்காக வருகின்றனர். இதில் அவ்வப்போது சிலர் தடுப்பணை தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிக்க போக கூடாது என போலீசார் எச்சரிக்கை பலகையுடன் பேரிகார்டும் அமைத்துள்ளனர். அதையும் தாண்டி பொதுமக்கள் குளித்து விபரீதத்தில் சிக்கி வருகின்றனர். இதை தடுக்க இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!