நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு... மதுரை, கோவை செல்ல இனி எவ்வளவு கூடுதல்?!
ரயில் பயணிகளுக்குப் பேரதிர்ச்சியாக, இந்திய ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் பயணக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் 26, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த அதிரடி மாற்றத்தால், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களின் டிக்கெட் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளது. எரிபொருள் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு உயர்வு?
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சாதாரண வகுப்புகளில் (Ordinary Class) 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்வோருக்கு ஒரு கி.மீ-க்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி அல்லாத பெட்டிகளுக்கும் (Non-AC), அனைத்து வகையான ஏசி வகுப்புகளுக்கும் (AC Classes) கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 215 கி.மீ-க்கு உட்பட்ட குறுகிய தூரப் பயணம், புறநகர் ரயில்கள் (Suburban) மற்றும் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை & கோவை பயணிகளுக்கு எவ்வளவு கூடுதல்? சென்னையிலிருந்து மதுரைக்கு (493 கி.மீ) மற்றும் கோவைக்கு (497 கி.மீ) பயணம் செய்பவர்கள் இனி எவ்வளவு கூடுதலாகச் செலவிட வேண்டும் என்ற விவரம் இதோ: ஏசி வகுப்புகள் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு: ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் கணக்கிட்டால், அடிப்படை கட்டணத்தில் சுமார் 10 ரூபாய் வரை உயரும்.
சாதாரண வகுப்பு (General) 215 கி.மீ-க்கு மேல் தூரம் என்பதால், கி.மீ-க்கு 1 பைசா வீதம் சுமார் 5 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கும். இது தவிர, ஜிஎஸ்டி மற்றும் முன்பதிவுக் கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கப்படும் என்பதால் மொத்த டிக்கெட் விலையில் சிறு மாற்றம் இருக்கும்.

ரயில்வேயின் வருவாய் இலக்கு:
இந்தச் சிறிய அளவிலான கட்டண உயர்வு மூலம் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் (மார்ச் 2026) சுமார் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஒருமுறை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர் செல்லத் திட்டமிடும் மக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாகவே பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
