இனி ஆதார் இணைப்பு இருந்தால் தான் ரயில் டிக்கெட்... ஜன.12 முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரயில் பயணங்கள் இனி மேலும் பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் மாறப்போகின்றன. ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், போலி ஐடிக்கள் மூலம் டிக்கெட்டுகள் மொத்தமாகப் பதுக்கப்படுவதைத் தவிர்க்கவும் இந்திய ரயில்வே வாரியம் ஒரு மிக முக்கியமான அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி 'ஆதார் இணைப்பு' என்பது ஒரு கட்டாய நடைமுறையாக மாறப்போகிறது.
தற்போது காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அமலில் உள்ள இந்த ஆதார் இணைப்பு நடைமுறை, வரும் நாட்களில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி, டிசம்பர் 29-ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்படும். அடுத்த கட்டமாக, ஜனவரி 5-ஆம் தேதிக்குப் பின்னர் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு அவசியம். இறுதியாக, ஜனவரி 12-ஆம் தேதிக்கு பிறகு, எந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமானாலும் ஆதார் இணைப்பு இருந்தால் மட்டுமே இணையதளம் அனுமதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவின் போது இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், உண்மையான பயனாளர்களுக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் அடையாளத்தை ஆதார் மூலம் சரிபார்ப்பதன் மூலம், ஒரே நபர் பல பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தடுக்க முடியும். மேலும், அவசர காலங்களில் பயணிகளின் சரியான விவரங்களை அறிந்துகொள்ளவும் இது உதவியாக இருக்கும்.

எனவே, வரும் ஜனவரி 12-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், தங்களது ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குடன் ஆதாரை இப்போதே இணைத்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதார் இணைப்பு இல்லாதவர்கள் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகும் சூழல் உருவாகலாம் என்பதால், பயணிகள் இந்த அறிவிப்பைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
