இடியுடன் ஆலங்கட்டி மழை... மரம் விழுந்து இருவர் பலி!
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வானிலை மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கான்பூர், லலித்பூர் மற்றும் ஜலான் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
கான்பூரின் காக்காதேவ் (Kakadeo) பகுதியில் நேற்று (ஏப்ரல் 4) மாலை வீசிய கடும் சூறாவளி மற்றும் மழையின் போது, சாலையோரம் இருந்த ஒரு பெரிய ஆலமரம் திடீரென அங்கு சென்றுகொண்டிருந்த வாடகை ஊர்தியின் (Auto) மீது விழுந்தது. இந்த விபத்தில் ஊர்தி ஓட்டுநர் சோனு (35) மற்றும் அதில் பயணித்த ஜமுனா தேவி (62) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்த பெண்ணின் மகள் ஜோத்சனா (30) படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் 45-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் 'ஆரஞ்சு' எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தால் கான்பூரில் மட்டும் சுமார் 200 மரங்களும், 90-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை வானிலையில் இத்தகைய மாற்றங்கள் நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
