தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறும் அபாயம் - லாரி ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!
நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட போராட்ட முடிவுகள் குறித்து சம்மேளனத் தலைவர் தன்ராஜ் விளக்கமளித்தார்.
15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய கட்டணம் ரூ.2,500 என்றும், தற்போதைய கட்டணம் (15 - 20 ஆண்டுகள்): ரூ.14,500 என்றும், 20 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு: ரூ.28,200 என்று ஏறத்தாழ 10 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சிறு லாரி உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பராமரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தினால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்தக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போல, தமிழகத்திலும் நிறுத்தி வைக்கக் கோரி போக்குவரத்து அமைச்சரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் லாரிகள் தகுதிச் சான்றிதழ் இன்றி ஏற்கனவே முடங்கிக் கிடக்கின்றன. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 25, 2026 (புதன்கிழமை) நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
