பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு டிரம்ப் வழக்கு!
அமெரிக்க நாடாளுமன்றக் கலவரம் குறித்த ஆவணப்படத்தில் தனது உரையைத் தவறாகச் சித்தரித்ததாகக் கூறி, பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி-க்கு எதிராக டொனால்ட் டிரம்ப் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது கேபிடல் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படத்தில், டிரம்பின் உரையின் இரண்டு வெவ்வேறு பகுதிகளை ஒன்றாக இணைத்து, அவர் கலவரத்தைத் தூண்டியது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து பி.பி.சி நிறுவனத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

பி.பி.சி. இயக்குனர் டிம் டேவி மற்றும் செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பி.பி.சி. நிறுவனம் இந்தத் தவறுக்காக டிரம்பிடம் மன்னிப்பு கோரியது. மன்னிப்பு கோரிய பின்னரும், அந்த ஆவணப்படம் தனது நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியதாக டிரம்ப் கருதுகிறார். எனவே, சுமார் ரூ. 90,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர காலக்கெடு முடிந்துவிட்டதால், தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பி.பி.சி. செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியபடி, இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதால் மேலதிகக் கருத்துகளைத் தெரிவிக்க இயலாது" என்று கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
