தவெக வேட்பாளர் தேநீர் தயாரித்து கொடுத்து வாக்கு சேகரிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அம்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.பாலமுருகன் மேற்கொண்டு வரும் நூதனப் பிரச்சாரம் தொகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. வேட்புமனுத் தாக்கலை முடித்த கையோடு சற்றும் தாமதிக்காமல் களத்தில் குதித்துள்ள பாலமுருகன், மற்ற வேட்பாளர்களைப் போலப் பெரிய வாகனங்களில் வலம் வராமல், மக்களுடன் மக்களாகக் கலந்து எளிமையான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். தினமும் காலை வேளையில் பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், இன்று அம்பத்தூர் புதூர் மற்றும் கள்ளிக்குப்பம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ‘விசில்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கள்ளிக்குப்பம் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த ஒரு டீக்கடைக்கு திடீரெனச் சென்ற வேட்பாளர் பாலமுருகன், அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். யாரும் எதிர்பாராத விதமாகத் தானே முன்வந்து கல்லாவில் அமராமல், அடுப்படியில் இறங்கிப் பம்பரமாகச் சுழன்று டீ ஆற்றத் தொடங்கினார். நுரை பொங்க அவர் டீ ஆற்றிய அழகைப் பார்த்த வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன்களில் அதைப் படம் பிடித்துச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். சிரித்த முகத்துடன் அங்கிருந்தவர்களுக்குத் தேநீர் விநியோகம் செய்தபடியே, தொகுதியின் குறைகளையும் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்த அவரது இந்த ‘எளிமை அரசியல்’ தொகுதிவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தாங்கல் பூங்கா முதல் மாதனாங்குப்பம் வரை அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். "பெரிய கட்சி வேட்பாளர்கள் ஆடம்பரமாக வரும் வேளையில், நம்மில் ஒருவராக வந்து டீ ஆற்றித் தரும் இந்த எளிமை ஆச்சரியமாக இருக்கிறது" என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். அம்பத்தூர் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், தவெக வேட்பாளரின் இந்த நூதன அணுகுமுறை மற்ற அரசியல் கட்சியினரிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், அம்பத்தூர் தொகுதியில் ‘விசில்’ சத்தம் பலமாக ஒலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
