தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்த 2 கேரள விசைப் படகுகளுக்கு தலா ரூ.13 லட்சம் அபராதம்!

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 2 கேரளா விசைப்படகுகளுக்கு தலா ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் வாழும் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மீன்பிடி தடைக்காலத்தில் கேரளா விசைப்படகுகள் தூத்துக்குடி கடலில் மீன்பிடித்தலில் ஈடுபடுவதை தடுக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் கடலில் தொடர் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 2 கேரளா விசைப்படகுகள் பிடிபட்டன. இந்த படகுகளில் இருந்த மீன்கள் ஏலம் விடப்பட்டு, அந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலத்தில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 2 விசைப்படகுகளுக்கும் தூத்துக்குடி மீன்வளம், மீனவர் நலத்துறை அதிகாரிகள் தலா ரூ.13 லட்சம் அபராதம் விதித்து உள்ளனர். மேலும் 2 படகுகளும் தலா 6 மாதம் மீன்பிடித்தலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 2 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கரையில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!