யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது!
துபாயில் இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர்களின் ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் இந்திய இளம்படைகள் சாம்பியன் பட்டத்தைத் தவற விட்டனர்.
பாகிஸ்தான் குவித்த இமாலய ரன்கள்: ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பாகிஸ்தான் பேட்டர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக, தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 113 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 172 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். அஹமது ஹொசைன் 56 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
𝐏𝐫𝐞𝐬𝐞𝐧𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐲𝐨𝐮 𝐭𝐡𝐞 #𝐃𝐏𝐖𝐨𝐫𝐥𝐝𝐌𝐞𝐧𝐬𝐔𝟏𝟗𝐀𝐬𝐢𝐚𝐂𝐮𝐩𝟐𝟎𝟐𝟓 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬 💚🇵🇰#ACC pic.twitter.com/rqWLgdE6yR
— AsianCricketCouncil (@ACCMedia1) December 21, 2025
இந்தியாவின் பேட்டிங் சரிவு: 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அலி ராஸாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். தீபேஷ் தேவேந்திரன் அதிகபட்சமாக 36 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 26 ரன்களும் எடுத்தனர். இறுதியில், இந்திய அணி 26.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.

அலி ராஸா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. சமீர் மின்ஹாஸின் அந்த அதிரடி சதம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
