அமீரக தேசிய தினம்... ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி - ‘ஜமால் அல் இத்திகாத்' சிறப்புப் பாடல் வெளியீடு!
அமீரகத்தின் 54வது தேசிய தினத்தை முன்னிட்டு, அபுதாபி அல் வத்பா பகுதியில் நடைபெற்று வரும் ஷேக் ஜாயித் திருவிழாவின் ஒரு பகுதியாக, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அவர் அமீரகத்திற்காக இசையமைத்த "ஜமால் அல் இத்திகாத்" என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டார்.
அமீரகத்தின் நிறுவன தந்தை எனப் போற்றப்படும் மறைந்த ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானின் தொலைநோக்குச் சாதனைகள், நாட்டின் வளர்ச்சி, புதுமை மற்றும் அமீரகத்தின் மதிப்புகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த இசைக் கோர்வை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா மற்றும் பெண்களால் நடத்தப்படும் அவரது இசைக் குழுவினரும் பங்கேற்றனர். இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.

இந்தப் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது: "ஜமால் அல் இத்திகாத் என்ற பாடலை உருவாக்கும் பணி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ஆனால், உலகளாவிய பதற்றங்கள் மற்றும் போர்கள் காரணமாகப் பாடலை வெளியிடத் தாமதமானது. இந்த மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என விரும்பினோம். இப்போது தான் அதற்கான சரியான நேரமாக உள்ளது."

"ஜமால் அல் இத்திகாத் என்பது நம்பிக்கைக்கான ஒரு நல்ல தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த நாடு, அதனைக் கட்டி எழுப்புவதற்கும் அதன் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் அனைத்து மக்களையும் அரவணைக்கிறது. அன்பு, பெருமை மற்றும் முன்னேற்றத்தில் இணக்கமான ஒரு தனித்துவமான நாடு அமீரகம். இந்தப் பாடல் வளமான மக்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது."
அமீரகத்தின் நிறுவனத் தந்தையின் தொலைநோக்குப் பார்வையைப் போற்றும் வகையில், இந்தச் சிறப்புப் பாடல் தேசிய தினக் கொண்டாட்டங்களில் முக்கியப் பங்காற்ற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
