“கூட்டணியில் விரிசல் வராதா என்று காத்திருக்கின்றனர்...” உதயநிதி பேச்சு!
'திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்' என்று இன்று தஞ்சாவூரில் எம்.பி.,கான புதிய அலுவலகத்தையும், கலைஞர் கருணாநிதி நூலகத்தையும் திறந்து வைத்து பேசுகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி அதில், “நான் துணை முதல்வராக வர வேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதுவும் முன்னாள் எம்.பி., பழனிமாணிக்கம் தான் கூறினார். அதன் பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார்.அதேபோல் நானும் டெல்டாகாரன் தான். தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என இந்தியாவில் பலரும் கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது.
மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜவும், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார்.
நமது கூட்டணி கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பார். 7வது முறையாக திமுக ஆட்சி அமையும்.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அந்த ராசியின் படி உடனே நிறைவேறி விடும் என கூறினார்கள். நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன்முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது நிறைவேறியது. அதன் பிறகு அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதல்வராக வேண்டும் என்றும் தஞ்சையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல், அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள்” என்று பேசினார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
