உதயநிதிக்கு "இளம் பெரியார்" தகுதி உண்டு... விஜய்யின் கொள்கை என்ன? - விளாசும் கி.வீரமணி!

 
வீரமணி

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று நடைபெற்ற திராவிடர் கழக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி பல்வேறு அரசியல் அதிரடிகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்துப் பேசிய அவர், "யாரெல்லாம் பெரியாரின் கொள்கைகளைத் தீவிரமாகத் தூக்கிப் பிடிக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் பெரியார்தான். அந்த வகையில் உதயநிதிக்கு 'இளம் பெரியார்' எனும் தகுதி இருக்கிறது. இதற்கு முன்னால் ஆசைத்தம்பி என்பவரைத்தான் இதுபோல அழைத்தார்கள்" என்று அடித்துச் சொன்னார். தமிழ்நாடு என்பது பெரியார் மண் என்பதால், யார் ஆட்சியில் இருந்தால் சமூக நீதி காக்கப்படுமோ, அந்தத் திராவிட மாடல் அரசை ஆதரிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதயநிதி

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய கி.வீரமணி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இணைந்து ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். அமலாக்கத் துறையை ஒரு தவறான ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் ஒரு கோடி வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியதோடு அதன் அடிப்படை நோக்கத்தையே மத்திய அரசு சிதைத்துவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஸ்டாலின் உதயநிதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைத்த கி.வீரமணி, "விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், இதுவரை உருப்படியாக எந்தக் கொள்கையையும் அவர் அறிவிக்கவில்லை. தான் முதலமைச்சராக வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவர் சொல்லவில்லை. முதலில் அவர் தனது கொள்கையைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார். மேலும், திமுக அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியைப் பெற்றுத் தரக் கோரிப் போராட வேண்டும் என்றும், மற்ற ஆட்சிகளை விட திமுக ஆட்சியில்தான் போராட்டங்களுக்கு அதிக அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சீமான் குறித்த கேள்விக்கு, "தெளிவான அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே பதிலளிப்போம், மற்றவர்களுக்கு அல்ல" என்று சுருக்கமாகப் பதிலளித்துச் சென்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!