இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா: நினைவு மலரை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்!
இசை உலகின் ஜாம்பவானும், திராவிட இயக்கத்தின் கம்பீரக் குரலாகத் திகழ்ந்தவருமான இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபாவின் நூற்றாண்டு விழா, நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 20, 2025) மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக "இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுச் சிறப்பித்தார்.
சுயமரியாதை இயக்கத் தொண்டராகவும், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராகவும் தனது பொதுவாழ்வைத் தொடங்கிய நாகூர் ஹனீபா, பட்டுக்கோட்டை அழகிரி முதல் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் காயிதே மில்லத் வரை அனைத்துப் பெரும் தலைவர்களின் அன்பைப் பெற்றவர். சுமார் 75 ஆண்டுகள் தமிழிசைக்கும், திரை இசைக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் வகையில் இந்தச் சிறப்பு மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அவரது வாழ்க்கைப் பயணம், அரிய பேட்டிகள் மற்றும் "மக்கத்து மலரே, மாணிக்கச் சுடரே" என்ற தலைப்பிலான அவரது வாழ்க்கை வரலாறு ஆகியவை விரிவாக இடம் பெற்றுள்ளன.

இந்த நினைவு மலரின் மிக முக்கிய அம்சமாக, ‘நீங்காத நினைவலைகள்’ என்ற பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன், ஜி.கே.மூப்பனார், வைகோ, திருமாவளவன், கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நாகூர் ஹனீபா குறித்துப் பகிர்ந்த உன்னதமான கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், கி.வீரமணி, முகம்மது ஷா நவாஸ், எழுத்தாளர் இமையம் உள்ளிட்ட அறிஞர்களின் சிறப்புக் கட்டுரைகளும், ஹனீபாவின் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரை பல்வேறு தலைவர்களுடன் அவர் இருக்கும் அரிய புகைப்படங்களும் வாசகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளன.
இசை ரசிகர்களுக்காக ‘காலத்தால் அழியாத கந்தர்வ குரல்’ என்ற பகுதியில், ‘அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’, ‘இறைவனிடம் கையேந்துங்கள்’, ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ போன்ற அவர் பாடி புகழ்பெற்ற பாடல்களின் தொகுப்பும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மதங்களைக் கடந்து மனங்களில் நிறைந்த ஹனீபாவின் புகழைத் தலைமுறை தாண்டி எடுத்துச் செல்லும் ஒரு பொக்கிஷமாக இந்த நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
