"கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வெச்சு ஒன்றும் செய்ய முடியாது" - விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் பேசிய இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாடு இல்லாமல் கூடும் கூட்டத்தைக் குறித்தும், அ.தி.மு.க.வின் நிலை குறித்தும் மிகக் காட்டமாகப் பேசினார். இதன் மூலம் அவர் நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல், சமீபத்தில் அரசியல் களத்தில் நுழைந்த நடிகர் விஜய்யைச் சாடியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் திமுக முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், 91 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

"நீங்கள் (பாஜக) பீகார், உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது. கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கோடி இளைஞர்கள் கூடினாலும் பிரச்சினை இல்லை; உங்கள் கணக்கைச் சுக்குநூறாக உடைக்கும் கூட்டம். வானவில் நிறங்கள் கலராக இருக்கும்; ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதயசூரியன் மட்டுமே நிரந்தரம்."
தொடர்ந்து பாஜகவையும், அதிமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்தார். பாஜகவைப் 'மதம் பிடித்த யானை' என நினைத்தாலும், அந்த யானையை அடக்கும் அங்குசம் நம் தலைவர் (மு.க. ஸ்டாலின்) வசம் உள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை வைத்து அச்சுறுத்தப் பார்த்தால், அது கனவில் கூட நடக்காது. "தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்" என்று மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறியதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

"அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 'எடப்பாடியை முதல்வர் ஆக்குவோம்' என்று தீர்மானம் போட்டார்கள். என்ஜின் இல்லாத காரை எவ்வளவு தள்ளினாலும் பலன் இல்லை. என்ஜின் இல்லாத காராக அதிமுக உள்ளது. அந்த என்ஜின் இல்லாத காரை பாஜக என்ற லாரி எப்படியாவது இழுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறது."
மேலும் 2026ல் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், பாசிச சக்திகளையும், அதற்கு அடிமையாக இருப்பவர்களையும் விரட்டியடிப்போம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனதுப் பேச்சில் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
