விவசாயிகளுக்கு அவசர செய்தி... பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்...- தமிழக அரசு தகவல்!
தேசியப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டுக்கான சம்பா நெல் பயிரைக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நாளை (டிசம்பர் 1) முடிவடைவதாகவும், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கான பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசால் இந்தக் கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது வரை, 31.33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 7.95 லட்சம் விவசாயிகளால் 19.06 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்தச் சாகுபடிப் பரப்பில் 61 சதவீதம் ஆகும்.
நவம்பர் 30ம் தேதி வரை காப்பீடு செய்யக் கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை காப்பீடு செய்யாத அனைத்து விவசாயிகளும், உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் (நாளை) இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 4 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீட்டுத் தொகை மத்திய அரசின் பங்குத் தொகை பெறப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தமிழக அரசுத் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
