திருப்பதியில் அமெரிக்க கிரிக்கெட் வீரர்கள் - குடும்பத்துடன் சாமி தரிசனம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி வீரர்கள், இன்று ஆந்திர மாநிலம் திருப்பதிக்குச் சென்றனர். அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், நட்சத்திர பந்துவீச்சாளர் சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட்டனர்.
கோவிலுக்கு வருகை தந்த வீரர்களுக்குத் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்கள் ரங்கநாயக்கர் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டு, வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அமெரிக்க கிரிக்கெட் அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி அமெரிக்க அணி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக, சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து கிரிக்கெட்டில் முத்திரை பதித்த சவுரப் நேத்ராவல்கர் போன்ற வீரர்கள் இந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள்.
தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்று வருவதால், தங்களது தாய் மண்ணில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள இவர்கள், முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இறை ஆசியைப் பெறத் திருப்பதிக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த ரசிகர்கள் கோவில் வளாகத்தில் அவர்களைச் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
