"வைகோவுக்கு வயசாயிடுச்சு... அவரது வீர சகாப்தம் முடிந்துவிட்டது" - செல்லூர் ராஜூ அட்டாக்!

 
செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளைத் தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

திமுக கூட்டணியில் நீடித்து வரும் வைகோ குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, "வைகோவுக்கு வயதாகிவிட்டதால் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டது. திமுகவை எதிர்த்துப் பெரும் மாநாடு நடத்தி கட்சி தொடங்கியவர் அவர். 1999-ல் எங்களுடன் (அதிமுக) இருந்தபோதுதான் அவருக்கு முறையான அங்கீகாரம் கிடைத்தது. அதிமுக கூட்டணியில் இருந்தபோதுதான் அவருக்கு 'பம்பரம்' சின்னமே கிடைத்தது. தற்போது அவர் நம்பகத்தன்மையற்ற தலைவராக மாறிவிட்டதால், அவரது தொண்டர்களே அவரைத் தூக்கி எறிந்துவிட்டனர். திண்டுக்கல் மாநாட்டில் கலைஞரைக் கட்டிப்பிடித்த அன்றே வைகோவின் வீர சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது" என்று விமர்சித்துள்ளார்.

வைகோ அழைப்பு

அமைச்சர் ராஜகண்ணப்பனை 'பச்சோந்தி' என்று குறிப்பிட்ட செல்லூர் ராஜூ, அவரது அரசியல் பின்னணி குறித்துப் பேசுகையில், "ராஜகண்ணப்பன் ஒரு கட்சியில் நிலையாக இருக்க மாட்டார். அவர் பழைய படங்களை விநியோகம் செய்தவர், அவருக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான். உடுப்பி ஹோட்டலில் சேடப்பட்டி முத்தையாவின் காலைப் பிடித்து அழுது சீட்டு கேட்டவர் இவர். அப்படிப்பட்டவர் எடப்பாடியாரைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார் என்ற எரிச்சலில் அவர் இப்படிப் பேசுகிறார்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "திமுக எப்போதுமே கூட்டணி கட்சிகளை மதிக்காது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திமுகவினர் புலம்ப வைத்துவிட்டார்கள். அதற்கு அவரே ஒரு சான்று. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் காங்கிரஸ்தான் அங்கே போர்க்குரல் எழுப்பியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசுகையில், அதிமுக அதிபெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை அவர் வழிமொழிந்தார். "கூட்டணிக்கு எந்தப் புதிய கட்சி வந்தாலும் ஏற்போம் என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் போட்டி என்னவோ அதிமுக - திமுக இடையேதான்" என்று கூறிப் பேட்டியை நிறைவு செய்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!