வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 30ல் சொர்க்கவாசல் திறப்பு - பெருமாள் கோவில்களில் குவியும் பக்தர்கள்!
ஆன்மீக ரீதியாக மிகவும் புனிதமாகக் கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்று அதிகாலை பெருமாள் கோவில்களில் நடைபெறும் 'சொர்க்கவாசல் திறப்பு' நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற வைணவத் தலங்களில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா அன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத தரிசனம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வடக்கு வாசல் (சொர்க்கவாசல்) வழியாகப் பெருமாள் எழுந்தருளும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடக்கும். அன்று முழுவதும் பூலங்கி சேவை, விசேஷ பூஜைகள் மற்றும் இரவு ஏகாந்த சேவை எனப் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் வரிசை கட்டியுள்ளன.
குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் திருக்கோவில் மற்றும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் ஆகியவற்றில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதேபோல், பழமையான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில் மற்றும் சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களிலும் உற்சவ மூர்த்திகளின் பவனிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான ஏழகரம், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மற்றும் மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவில் என அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் அன்று அதிகாலையிலேயே அபிஷேகங்கள் தொடங்க உள்ளன. சொர்க்கவாசல் வழியாக வரும் பெருமாளைத் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பார்கள் என்பதால், தடுப்புகள் அமைத்தல், குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கோவில் நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாகப் பெருமாளைத் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
