திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி... குலுக்கல் முறையில் 23,00,000 பேருக்கு டோக்கன்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்க உள்ள வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் குறித்து ஆந்திர அரசு அமைத்துள்ள அமைச்சர்கள் குழு இன்று விரிவான ஆய்வு நடத்தியது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டங்களை விளக்கினார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, இந்த ஆண்டு விஐபி (VIP) தரிசனத்தைக் குறைத்து, சாதாரண பக்தர்களுக்கு அதிக நேரம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரையிலான 10 நாட்களில், மொத்தமுள்ள 182 மணிநேர தரிசன நேரத்தில், 164 மணிநேரம் (அதாவது 90%) இலவச தரிசனத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சாமானிய பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனத்தை எளிதாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வைகுண்ட துவார தரிசனத்திற்காக இந்தியா முழுவதும் 27 மாநிலங்களைச் சேர்ந்த 23.64 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் (Lucky Dip) டோக்கன்களைப் பெற்றுள்ளனர். முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் 1.89 லட்சம் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன் வைத்துள்ள பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் திருமலைக்கு வந்தால் போதுமானது. அதேசமயம், டோக்கன் இல்லாத பக்தர்கள் ஜனவரி 2 முதல் 8-ஆம் தேதி வரை 'சர்வ தரிசனம்' வரிசை வழியாக அனுமதிக்கப்பட்டு, வைகுண்ட துவார தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் முதல்முறையாகச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் வரிசைகள் கண்காணிக்கப்பட உள்ளன. ஏ.ஐ. கேமராக்கள் மூலம் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் காத்திருக்க வேண்டிய நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு, வரிசை மேலாண்மையைச் சீரமைக்கத் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. காவல்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் இணைந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தடையின்றி உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் திருவிழாக் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அனைவரும் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்களின் முழுமையான திருப்தியே இந்த ஏற்பாடுகளின் நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
