நாளை திருப்பதியில் ‘ஆழ்வார் திருமஞ்சனம்’ - வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்!

 
திருப்பதி பெருமாள் வெங்கடாஜலபதி துளசி

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மிக முக்கியமான வைபவங்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி விழா, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோவிலைச் சுத்தப்படுத்தும் ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனும் புனிதப் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதற்காகத் திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதியில் ஆண்டுதோறும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நான்கு முக்கியப் பண்டிகைகளுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ நடத்தப்படுவது மரபு. நாளை அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை ஆனந்த நிலையம் தொடங்கி தங்க வாசல் வரை உள்ள அனைத்து சன்னதிகள், பிரசாத அறை மற்றும் சுவர்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்படும். பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த ‘பரிமள நீர்’ கோவில் முழுவதும் தெளிக்கப்படும். இந்தப் பணி நடைபெறும் நான்கு மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

திருப்பதி

இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ள முடிவின்படி, டிசம்பர் 30 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்குச் சொர்க்கவாசல் (வைகுண்ட துவாரம்) வழியாகப் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பதி

கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு நாளை (டிசம்பர் 23) நடைபெறவிருந்த ‘அஷ்டதள பாத பத்மாராதனை’ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை மிக முக்கியப் பொறுப்புகளில் உள்ள தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கான விஐபி (VIP) தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தின் மிக உன்னதமான தினமாகக் கருதப்படுவதால், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் பக்தி பரவசம் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!