4 நாளில் காதலர் தினம்... ஓசூர் ரோஜாவுக்கு மவுசு அதிகம் - விவசாயிகள் மகிழ்ச்சி!
காதலர் தினத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் ரோஜா மலர்களுக்குத் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில்களில் விளையும் ரோஜாக்கள் தற்போது வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகின்றன: வழக்கமாக 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ரூ. 150-க்கு விற்பனையாகும். ஆனால் தற்போது தேவை அதிகரிப்பால், ஒரு கட்டு ரூ. 600 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய விலை உயர்வாகும்.

அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் 'தாஜ்மகால்' ரக ரோஜாக்களுக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்துள்ளன. சாதாரண நாட்களில் தினமும் 2 லட்சம் மலர்கள் விற்பனைக்குச் செல்லும் நிலையில், தற்போது நாளொன்றுக்கு 10 லட்சம் மலர்கள் வரை சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கேரளா போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மலை மாவட்டமான நீலகிரியில் விளையும் கொய்மலர்களுக்கும் கிராக்கி அதிகரித்துள்ளது: நிலவும் கடும் குளிர் காரணமாக நீலகிரியில் ரோஜா உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்தும் ரோஜாக்கள் வரவழைக்கப்படுகின்றன. சாதாரணமாக ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படும் ஒரு ரோஜா, காதலர் தினத்தன்று ரூ. 20 முதல் ரூ. 50 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது. லில்லியம், ஜெர்பரா மற்றும் ஆந்தூரியம் போன்ற கொய்மலர்களுக்கும் தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

இந்த ஆண்டு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் பூக்களைக் கொள்முதல் செய்கின்றன. இதனால் உள்ளூர் மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை வழக்கத்தை விட இருமடங்காக உயர்ந்துள்ளது. விமானக் கட்டண உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் போட்டி காரணமாக, விவசாயிகள் இந்த ஆண்டு வெளிநாட்டு ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்டு, லாபகரமாக இருக்கும் உள்நாட்டுச் சந்தையிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
