மழை பாதிப்பால் காய்கறி விலை உச்சம்... 1 கிலோ கத்தரிக்காய் ரூ.140; தக்காளி, வெண்டைக்காய் விலையும் கிடுகிடு உயர்வு!
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் சமீபத்திய ‘தித்வா’ புயலின் தாக்கம் காரணமாகக் காய்கறி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்துக் கணிசமாகக் குறைந்ததால், அவற்றின் விலைகள் திடீரெனச் சரமாரியாக உயர்ந்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கிப் பயிர்கள் சேதம் அடைந்தன. குறிப்பாகக் காய்கறிப் பயிர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டதால், சந்தைகளுக்கு வரவேண்டிய காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. மேலும், திருமண முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளின் தேவை சந்தையில் அதிகரித்தது. வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு ஆகிய இரண்டு காரணங்களும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாய் அமைந்தன.

தினசரி சமையலில் அத்தியாவசியமாகக் கருதப்படும் காய்கறிகளின் விலை உயர்வு, இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்று வந்த வெள்ளை கத்தரிக்காய், நேற்று மேலும் ரூ. 20 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான சந்தைகளில் வெள்ளைக் கத்தரிக்காய் தட்டுப்பாடு நிலவுகிறது.
ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை நேற்று ஒரே நாளில் உயர்ந்து ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெண்டைக்காய் விலையும் உயர்ந்து கிலோ ரூ.80 ஆக விற்பனை ஆனது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.75 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. ஊட்டி கேரட் விலையும் உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது.

பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், உருளைக்கிழங்கு விலையில் மாற்றம் இன்றி ரூ.30 முதல் ரூ.35 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் விலை மட்டும் சற்று குறைந்து ரூ. 65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் கருத்துப்படி, வருகிற பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
