"அண்ணன் செங்கோட்டையனின் அனுபவம் உறுதுணையாக இருக்கும்" - வீடியோ வெளியிட்டு வரவேற்ற விஜய்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) மிக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முறைப்படி இணைந்தார். இந்த முக்கிய அரசியல் நகர்வை உறுதிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையனின் அனுபவத்தைப் பாராட்டி அவரை வரவேற்றுத் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் உள்ளவரும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமிக்கவருமான கே.ஏ. செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகக் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தும் அது ஏற்கப்படாத நிலையில், அவர் கட்சிப் பதவிகளில் இருந்தும், பின்னர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
இந்நிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணையப் போவதாகப் பரவிய தகவல், நேற்று (நவம்பர் 26) அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததின் மூலம் உறுதியானது. அதன்படி, இன்று காலை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்கள், முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருடன் செங்கோட்டையன் வருகை தந்தார்.
அங்குத் த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர், அவர் தலைவர் விஜய்யைச் சந்தித்து, முறைப்படித் த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

செங்கோட்டையனின் இணைவைத் தொடர்ந்து, அவரை வரவேற்கும் விதமாகத் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டார். அதில் விஜய் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றவர் அண்ணன் செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருபெரும் தலைவர்களுக்கும் (எம்.ஜி.ஆர், ஜெயலலிதா) மிகப்பெரிய நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் (அ.தி.மு.க.) இருந்த செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார். அவர் இணைந்து மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். செங்கோட்டையனின் அனுபவம் த.வெ.க.வுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். .
அனுபவமிக்க செங்கோட்டையனுக்குத் த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான அமைப்புப் பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
