ஜனநாயகன்' ரிலீஸ் வாய்ப்பில்லை - கெடுபிடியால் தள்ளிப்போகும் விஜய்யின் கடைசி படம்!
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜனநாயகன்', முதலில் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் எழுப்பியுள்ள ஆட்சேபனைகளால் தற்போது வரை படம் திரைக்கு வரவில்லை.
படத்தின் சில அரசியல் காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாகத் தணிக்கைக் குழுவினர் சில வெட்டுக்களுக்கு (Cuts) பரிந்துரைத்தனர். தயாரிப்பு நிறுவனம் அவற்றை ஏற்றுக் கொண்ட பிறகும், ஒரு தனிநபரின் புகாரின் அடிப்படையில் இந்தப் படம் தற்போது மும்பையில் உள்ள மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27 அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் மறு ஆய்வுக் குழு படத்தைப் பார்த்து சான்றிதழ் வழங்காததால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. கனடா உள்ளிட்ட வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் (York Cinemas), வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதாலும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறுவதாலும், வணிக ரீதியாகப் படத்தை மார்ச் மாதத்தில் வெளியிடுவது சிக்கலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், தேர்தலுக்குப் பிறகுதான் படம் வெளியாகும் என்பது உறுதியாகி வருகிறது.

தற்போது சினிமா வட்டாரத்தில் கசியும் தகவலின்படி, விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அல்லது முஹர்ரம் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு ஜூன் 18, 2026 அன்று படத்தை மிகப்பிரமாண்டமாக வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் களத்தில் பிஸியாக இருக்கும் விஜய்க்கு, அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படம் இப்படிச் சிக்கலில் சிக்கியுள்ளது தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
