வங்காளதேசத்தில் தொடரும் வன்முறை... மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் புரட்சிக்குப் பிறகு அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ள நிலையில், அங்கு மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியற்ற சூழலில், மாணவர் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் குறிவைக்கப்படுவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஷெரீப் உஸ்மான் ஹாதி என்ற மாணவர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், நேற்று மற்றொரு இளந்தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மர்ம நபர்களின் கோரத் தாக்குதல்: தேசிய குடிமக்கள் கட்சியின் குல்னா பிரிவு தலைவராகப் பணியாற்றி வரும் மொதாலேப் ஷிக்தர், தென்மேற்கு குல்னா நகரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியது. இதில் மொதாலேப் ஷிக்தரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், உடனடியாகக் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிர் காக்கப் போராடும் மருத்துவர்கள்: துப்பாக்கிச் சூட்டில் மொதாலேப் ஷிக்தரின் தலையில் குண்டு பாய்ந்ததால், அவருக்குப் பெருமளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக (Critical Condition) இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாகக் கூடியுள்ளதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
துலங்காத மர்மம் - கொந்தளிக்கும் மாணவர்கள்: இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதி என்ன? என்பது குறித்து வங்காளதேசப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரை குற்றவாளிகள் குறித்த எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முக்கிய மாணவர் தலைவர்கள் வரிசையாகத் தாக்கப்படுவது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் வங்காளதேசம் முழுவதும் மீண்டும் ஒரு மாணவர் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் நாடு தழுவிய அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
