ஜனநாயக புரட்சி... "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!"... மீனவ கிராமத்தின் அதிரடி 'எச்சரிக்கை' பதாகை!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தின் ஒரு சிறிய மீனவ கிராமம் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கும் ஒரு மிகப்பெரிய பாடம் புகட்டியுள்ளது. காரைக்காலில் உள்ள கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், ஊரின் முக்கிய நுழைவாயிலில் ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் பதாகை வைக்கப்பட்டுள்ளது. 'எச்சரிக்கிறோம்' என்ற தலைப்புடன் வைக்கப்பட்டுள்ள அந்தப் பதாகையில், "எங்கள் கிராமத்திற்கு வாக்குக் கேட்க வரும் வேட்பாளர்கள் எவரும் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்கக் கூடாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்ட சூழலில், "எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யுங்கள்; அதைத் தவிர்த்து எங்கள் வாக்குகளை விலை பேச வேண்டாம்" என அந்த கிராமத்தினர் விடுத்துள்ள கோரிக்கை மற்ற பகுதி மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை ஊர் கட்டுப்பாட்டை மீறி யாராவது பணம் கொடுக்க முயன்றால் அல்லது மக்கள் வாங்கினால், அவர்கள் மீது ஊர் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தப் பதாகையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலை நேர்மையாக நடத்தத் துடிக்கும் அதிகாரிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பு காரைக்கால் பகுதி வேட்பாளர்களைச் சற்று அதிர்ச்சியடைய வைத்தாலும், சமூக ஆர்வலர்கள் பலரும் இதைப் பாராட்டி வருகின்றனர். "வாக்குக்கு பணம் பெற்றால், நமக்கான உரிமையை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்க முடியாது என்பதைப் பலரும் உணர்வதில்லை. ஆனால் கிளிஞ்சல்மேடு மக்கள் அதைச் செயலில் காட்டத் தொடங்கிவிட்டனர்" என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். காரைக்கால் மீனவ கிராமத்தின் இந்த 'ஜனநாயகப் புரட்சி' இப்போது புதுச்சேரி முழுவதும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
