ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு வாசகம்!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR - Special Intensive Revision) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணியின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாவட்ட நிர்வாகம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்களை அச்சடித்து வெளியிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைத் திருத்துதல், விடுபட்டவர்களைச் சேர்த்தல் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குதல் போன்ற சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக அவ்வப்போது சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.

இந்தத் திருத்தப் பணிகளில் பொதுமக்கள் முழுமையாகப் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், சேலம் மாவட்ட நிர்வாகம் ஒரு நூதனமான முயற்சியை எடுத்துள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான ஆவின் பால் பாக்கெட்டுகளை இதற்காகத் தேர்வு செய்துள்ளது.
சேலம் ஆவின் பால் பாக்கெட்டுகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த வாசகம்: "சேலம் மாவட்டம் வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிர திருத்தம் 2026: தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 கணக்கீட்டு படிவத்தினை தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்துவிட்டீர்களா?" என்று அச்சிடப்பட்டுள்ளது.
தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பால் பாக்கெட்டுகளில் இத்தகைய விழிப்புணர்வு வாசகங்களை அச்சிடுவது, பொதுமக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
