செல்போன் எண்களைத் தவறாகப் பயன்படுத்தும் மர்ம நபர்கள்... எஸ்.ஐ.ஆர். படிவத்தால் நேரிடும் அவலம்!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியால் (SIR) பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், வாக்காளர்களின் செல்போன் எண்கள் தவறான நபர்கள் கைகளுக்குச் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
முதலில் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்ப அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் மற்றும் கேரளா எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த அவகாசம் தற்போது டிசம்பர் 11 வரை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் கூட நாட்டில் நடந்துள்ளதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகத் ராய் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூன்று முறை வீடுகளுக்கு வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தாலும், உண்மையில் அவர்கள் ஒருமுறை மட்டுமே வருவதாகவும், அதன் பிறகு படிவங்களைப் பெறுவதற்கும், பூர்த்தி செய்து கொடுப்பதற்கும் பொதுமக்களே முகாமிட்டுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எஸ்.ஐ.ஆர். பணியின் போது ஏற்பட்ட மிக முக்கியப் பிரச்சினை, வாக்காளர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்கள் பொதுவெளியில் கசிந்ததுதான். கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகிப்பது, திரும்பப் பெறுவது மற்றும் ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் பல இடங்களில் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள்தான் செய்கின்றனர். இதனால், பொதுமக்கள் படிவங்களில் கொடுத்துள்ள ஆதார் மற்றும் செல்போன் எண்கள் அவர்கள் வசம் சென்று விடுகிறது.

இதன் மூலம், ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் யார், அவர்களின் செல்போன் எண்கள் என்ன என்பது பொதுவெளியில் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு மாநிலம் முழுவதும் பிரசார மெசேஜ்கள் அனுப்பப்பட்ட நிலையில், இனி தொகுதி வாரியாக அரசியல் பிரசாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. சில இடங்களில், மர்ம நபர்கள் பொதுமக்களுக்குத் தொலைபேசி செய்து, "உங்களது கணக்கெடுப்புப் படிவத்தில் சில கூடுதல் தகவல்கள் வேண்டும்" என்று கேட்கின்றனர்.
மக்கள், "நீங்கள் பூத் அலுவலரா?" என்று கேட்டால், "இல்லை" என்று சொல்லிவிட்டு, பிறகு தாங்கள் யார் என்று பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனவே, வாக்காளர்களின் செல்போன் எண்கள் தவறான நோக்கத்தோடு பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
