'கார், பைக் தருகிறேன்னு சொல்ல நான் என்ன பிக்காளி பையலா?' - விஜய்யை விமர்சித்த சீமான்!

 
சீமான் விஜய்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், நடிகர் விஜய் தனது கட்சியில் அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடினார். 'மோட்டர் பைக், கார் தருகிறேன் எனக் கூற நான் என்ன பிக்காளி பையலா?' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அவர் விடுத்த விமர்சனம் அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களான முத்துகேசவன் மற்றும் எழில் இளவரசி ஆகியோரை அறிமுகம் செய்யும் கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

சீமான்

கூட்டத்தில் பேசிய சீமான், நடிகர் விஜய் தான் புதிதாகத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் அறிவித்திருக்கும் இலவசத் திட்டங்கள் குறித்துக் கடுமையாக விமர்சித்தார். "மோட்டர் பைக் தருகிறேன், கார் தருகிறேன் எனக் கூறுவதற்கு நான் என்ன பிக்காளி பையலா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "வீட்டுக்கு ஒரு கார் தருகிறேன் எனக் கூறியுள்ளார் விஜய்" என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், ஒருவேளை அவர் வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் கார் குறித்துக் கேள்வி எழுப்பினால், "அனைவரின் வீட்டிற்கும் அண்ணல் அம்பேத்கர் போட்டோவை அனுப்பி வைத்து, அதில் கார் உள்ளது எனக் கூறுவார். அண்ணல் அம்பேத்கர் தான் உலகின் சிறந்த கார் எனச் சொல்வார்" என்றும் கிண்டலாகச் சாடினார்.

அண்மையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்துப் பேசிய சீமான், "பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அ.தி.மு.க.வில் கட்சிப் பதவி தேவை இல்லை என்பதால் அவர் வேறு கட்சிக்குச் செல்லலாம்" என்றும் குறிப்பிட்டார்.

சீமான்

தொடர்ந்து தனது பேச்சில், "சிவன் ஆட்டத்தைப் பார்த்து இருப்பீர்கள், அதையும் சினிமாவில் தான் பார்த்திருப்பீர்கள், சீமானின் ஆட்டத்தை இந்தத் தேர்தல் களத்தில் பார்ப்பீர்கள்" என்று சவால் விடுத்தார்.

மேலும், "எனது ஆட்சியில் பசி இல்லாத நாடு, அனைவருக்கும் வேலை, மருத்துவம், படிப்பை எப்படி கொடுத்துள்ளேன் எனக் காண்பிப்பேன். வரும் தேர்தலில் ஒன்று ஆட்சி அமைப்பேன், இல்லை என்றால் என் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது" என்றும் அவர் கூறினார்.

"நான் ஆசிரமங்கள், மடங்களில் இருந்து வரவில்லை. நான் ஒரு காட்டான். எங்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்தி மேலே ஏறி வந்துள்ளோம்" என்று தனது அரசியல் பயணத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார். இறுதியாக, "கோவப்படாமல் இருந்திருந்தால் நான் கோடம்பாக்கத்தில் இருந்து நல்ல படங்கள் எடுத்துப் பிழைத்திருப்பேன். கோபம் தான் என்னைக் கொண்டு வந்து இங்கு நிறுத்தி உள்ளது" என்று தனது ஆவேசத்திற்குக் காரணத்தையும் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!