வாட்ஸ்ஆப் பயனர்களே உஷார்... சென்னையில் ரூ.3.4 கோடி சுருட்டிய பலே கும்பல் - பெண்கள் உட்பட 3 பேர் கைது!
வாட்ஸ்ஆப் மூலம் போலியான ஆன்லைன் முதலீட்டு வர்த்தகக் குழுவை உருவாக்கி, சுமார் 3.4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சத்தியநாதன் (68) என்பவருக்கு கடந்த ஜூலை 2025-ல் ஒரு வாட்ஸ்ஆப் அழைப்பு வந்துள்ளது. தங்களைப் பிரபல 'Fyers Securities' அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், அவரை “FYERS VIP” என்ற வாட்ஸ்ஆப் குழுவில் இணைத்துள்ளனர்.
அங்கு பங்குச்சந்தை முதலீடு குறித்துத் தொழில்முறை ரீதியாகப் பேசி நம்பிக்கை வரவழைத்த அந்த கும்பல், “FYERSHNI” என்ற பிரத்யேக மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லியுள்ளது. இதனை நம்பிய சத்தியநாதன், 2025 ஜூலை 7 முதல் ஜூலை 25 வரையிலான குறுகிய காலத்தில் சுமார் 3 கோடியே 40 லட்ச ரூபாயை, மோசடியாளர்கள் சொன்ன 13 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

தான் முதலீடு செய்த பணத்தையும், அதற்குரிய லாபத்தையும் திரும்பப் பெறச் சத்தியநாதன் முயன்றபோது, அந்தச் செயலி திடீரென முடக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் (National Cyber Crime Reporting Portal) புகார் அளித்தார்.
சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பயன்பாடு: கைதான கும்பல், மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களை அணுகி, "உங்களது வங்கி கணக்குகளைப் பயன்படுத்தக் கொடுத்தால் அதிக கமிஷன் தருவோம்" என ஆசை வார்த்தை கூறி, அவர்களின் கணக்குகளைப் பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தியுள்ளது. சுமார் 45 லட்சம் ரூபாய் வரை இத்தகைய வங்கி கணக்குகள் மூலம் காசோலை வாயிலாக எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (51) ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முருகேஷ் (49), மற்றும் எப்சி (35), பஞ்சவர்ணம் (33) ஆகிய இரண்டு பெண்களைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் டிசம்பர் 25, 2025 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு டிப்ஸ்:
அறிமுகமில்லாத வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து முதலீடு செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத நபர்கள் பரிந்துரைக்கும் செயலிகளை (Apps) ஒருபோதும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். 'அதிக லாபம்' என ஆசை காட்டும் எதிலுமே அதிக கவனம் தேவை. சைபர் மோசடிக்குள்ளானால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
