சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய போது சோகம்... கார் விபத்தில் 2 பக்தர்கள் உயிரிழப்பு!
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் கார், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே விபத்தில் சிக்கியது. இந்தத் துயரச் சம்பவத்தில் இரண்டு ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், தடா அருகே உள்ள வாகைபாளையத்தைச் சேர்ந்த நரேஷ்குர்லா (32), அவரது மகன் சாதுர்யா (9) மற்றும் நண்பர் வேணு (55) ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சபரிமலைக்குச் சென்றிருந்தனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு, காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தக் காரை முனிதேஜா (28) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று மாலை கார் பெரியகுளம் வடுகபட்டி புறவழிச்சாலை அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கார் அதிவேகமாகப் பாலத்தில் மோதி, அருகில் இருந்த 15 அடி பள்ளத்தில் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நரேஷ்குர்லா (32) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த மற்றவர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வேணு (55) உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்துத் தென்கரை காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். சபரிமலை தரிசனம் முடித்துத் திரும்பியவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
