ஓய்வு முடிவைத் திரும்ப பெற்றது ஏன்? வினேஷ் போகத் உருக்கம்!
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தான் எடுத்திருந்த ஓய்வு முடிவை உடைத்து, மீண்டும் போட்டிகளில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை இலக்காக வைத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். வினேஷ் போகத் கடந்த ஆண்டு பாரீஸில் நடந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஆனால், தங்கப்பதக்கத்துக்கான இறுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்பு, அவரது உடல் எடையைச் சோதித்தபோது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக நிறைய பயிற்சியுடன் தலைமுடியைக்கூட வெட்டிப் பார்த்தும் எடையைக் குறைக்க முடியவில்லை. இதனால் அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கப்பட்டதால், பதக்கமேடையில் ஏறும் கனவு நொறுங்கிப் போனது.

இறுதிப் போட்டிக்கு முன்பு வரை தனது உடல் எடை சரியாக இருந்ததால், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று அவர் விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். ஆனால், அவரது கோரிக்கையைத் தீர்ப்பாயம் நிராகரித்து விட்டதால், போட்டியில் இருந்து வெளியேறிய விரக்தியில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சில மாதங்களில் அரசியலில் குதித்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அண்மையில், அதாவது கடந்த ஜூலை மாதத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், 31 வயதான வினேஷ் போகத் ஓய்விலிருந்து மீண்டு வந்துள்ளார். தனது இந்த முடிவுக்குப் பின்னாலுள்ள காரணம் குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். "பாரீஸ் ஒலிம்பிக்தான் உங்களது கடைசிப் போட்டியா? என்று மக்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நீண்ட காலமாக என்னிடம் அதற்குக் பதில் இல்லை. ஏனெனில், கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு வருவதற்காக விளையாட்டில் இருந்தும், அழுத்தத்தில் இருந்தும், சொந்த லட்சியங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டியிருந்தது. சில ஆண்டுகளில் இப்போதுதான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்" என்று அவர் பதிவைத் தொடங்கினார்.

மேலும், "எனது பயணத்தின் உச்சம், மனவேதனைகள், தியாகங்கள் மற்றும் உலகம் இதுவரை கண்டிராத என்னைப் பற்றிய பதிப்புகளை எல்லாம் புரிந்துகொள்ள நான் நேரம் எடுத்துக்கொண்டேன். ஆனால், இந்த விளையாட்டை நான் இன்னும் நேசிக்கிறேன் என்றும், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன் என்றும் கண்டறிந்தேன். அத்துடன், சாதிக்க வேண்டும் என்ற நெருப்பு எனக்குள் இன்னும் எரிந்துகொண்டு இருக்கிறது என்பதையும் நான் புரிந்து கொண்டேன். ஒழுக்கம், பயிற்சி, போராட்டம் இவை எனது ரத்தத்தில் ஊறிப்போனவை. நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும் என்னுள் ஒரு பகுதி மல்யுத்தக் களத்திலேயேதான் இருக்கிறது" என்று தனது விளையாட்டுப் பற்று குறித்துத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "எனவே, 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை நோக்கி, அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலைகுனியாத மன உறுதியுடன் மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன். இந்த முறை நான் தனியாகச் செல்லப்போவதில்லை. எனது மகன் எனது அணியில் இணைகிறான். ஒலிம்பிக்கை நோக்கிப் பயணிப்பதற்கு இந்த குட்டிச் 'சியர்லீடர்' மிகப்பெரிய உந்துசக்தியாக இருப்பான்," என்று வினேஷ் போகத் உறுதியுடன் பதிவிட்டுள்ளார். அவரது இந்த மன உறுதிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
