கிரீஸ் தீவில் 4வது நாளாக காட்டுத்தீ... தீயணைப்புப் பணிகள் தீவிரம்!

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவில், 4வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர்.கிழக்கு ஏகன் தீவான சியோஸிலுள்ள, வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களின் மீது, தொடர்ந்து பரவி பல அடி உயரத்துக்கு எரியும் காட்டுத் தீயால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தீவின் மத்திய நகர் பகுதியில் இந்தக் காட்டுத் தீயானது பரவியுள்ளதால், கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் அங்குள்ள ஏராளமான கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, அங்கு பரவி வரும் தீயை அணைக்க சுமார் 444 தீயணைப்புப் படை வீரர்கள், 85 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் போராடி வருகின்றனர்.மேலும், 11 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 விமானங்கள் ஆகியவற்றின் மூலம் காட்டுத் தீயின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்துடன், இந்தக் காட்டுத் தீயானது மர்ம நபரின் செயலால் உருவாகியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், அதற்கான விசாரணையில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கோடைக்காலத்தில் கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 100-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!