ராட்சத அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியர் உயிரிழப்பு... மற்றொருவரைத் தேடும் பணி தீவிரம்!
சென்னையில் உள்ள 'பிரபவ' (Prabhava) என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 30 ஊழியர்கள், தங்களது வார விடுமுறையைக் கழிக்கக் கானத்தூர் அருகேயுள்ள முத்தண்டி நயினார் குப்பம் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு சிலர் கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் (25) மற்றும் மயூரி (25) ஆகிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

சக நண்பர்கள் போராடி மயூரியை மீட்டனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடலில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு ஊழியரான ஜெய்யை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கானத்தூர் காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகள் மற்றும் மீனவக் கிராமங்களுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நண்பர்களுடன் உற்சாகமாகப் பொழுதுபோக்கச் சென்ற இடத்தில், கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து சக ஊழியர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
