"ரூ.20,000 கொடுத்தா ஒரு பெண்ணைத் தூக்கிடலாம்” பெண்கள் நல அமைச்சரின் கணவர் சர்ச்சை பேச்சு!

 
பெ

பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்துப் பேச வேண்டிய அமைச்சரின் குடும்பத்திலிருந்தே, பெண்களை விலைக்கு வாங்குவது போன்ற ஒரு பேச்சு கிளம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில அமைச்சரின் கணவர் பேசிய பேச்சு, இப்போது பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு இடையே அரசியல் மோதலாக மாறியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ரேகா ஆர்யா. இவரது கணவர் கிர்தாரி லால் சாஹு, அல்மோராவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இளைஞர்களிடையே பேசிய அவர்: "முதுமை வரை காத்துக் கொண்டிருந்தால் திருமணம் செய்ய முடியாது. உங்களுக்கு இப்போது திருமணம் செய்ய முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். என்னுடன் வாருங்கள், பீகாரில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வருவோம். அங்கு ₹20,000 முதல் ₹25,000 கொடுத்தால் ஒரு பெண்ணை அழைத்து வந்துவிடலாம். நான் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்" என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்களைப் பண்டமாகச் சித்தரிக்கும் இழிவான செயல் எனப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன.

இந்த விவகாரத்தைப் பிடித்துக் கொண்ட பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பா.ஜ.க.வை கடுமையாகச் சாடியுள்ளார். "பா.ஜ.க. தலைவர்களின் மனநிலை எவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதற்கு இதுவே சாட்சி. பீகாரில் பெண்களின் வாக்குகளை ₹10,000-க்கு வாங்கியவர்கள், இப்போது பெண்களையே ₹20,000-க்கு விலைக்கு வாங்குவோம் என்கிறார்கள். இது பீகார் மக்களையும், ஒட்டுமொத்தப் பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் செயல்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

திருமணம் கல்யாணம்

நிலைமை கைமீறிச் செல்வதைக் கண்ட உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைமை, "கிர்தாரி லால் சாஹுவின் கருத்து தனிப்பட்டது, அதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என உடனடியாகத் தங்களைக் கைகழுவிக் கொண்டது. பிரச்சனை பெரிதானதைத் தொடர்ந்து கிர்தாரி லால் சாஹு மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் ஒரு நண்பரின் தனிப்பட்ட திருமண விவகாரம் குறித்து வேடிக்கையாகப் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்டாலும், ஒரு அமைச்சரின் கணவர் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் பெண்களை விலைபேசுவது போலப் பேசியது பீகார் மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் பலரும் அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!