போலீசார் துன்புறுத்தலால் இளைஞர் தற்கொலை - 3 நாட்களாக உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் போராட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி விஜயகுமார் (31), சென்னை மவுலிவாக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், தற்போது போலீசாருக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.
விஜயகுமாரின் மனைவி திவ்யா அளித்துள்ள புகாரில், கடந்த ஜனவரி 14ம் தேதி நகை திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில், கபிஸ்தலம் போலீசார் விஜயகுமார் உட்பட 4 பேரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களை ஒரு ரகசிய இடத்தில் வைத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீஸார் கடுமையாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விஜயகுமார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையிலிருந்து சென்னை திரும்பிய விஜயகுமார், போலீசாரின் சித்ரவதையால் ஏற்பட்ட உடல் உபாதை மற்றும் மன உளைச்சல் காரணமாகப் பிப்ரவரி 4 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், சென்னை மவுலிவாக்கம் போலீசார் இந்தச் சம்பவத்தைக் 'கணவன்-மனைவி தகராறு' என வழக்கை மாற்றி எழுதி, திவ்யாவிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த பிப்ரவரி 6ம் தேதி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான ஆடுதுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், நீதி கிடைக்கும் வரை உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என உறவினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்:
விஜயகுமாரைத் தாக்கிய கபிஸ்தலம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இன்று பிப்ரவரி 8ம் தேதி மூன்றாவது நாளாக உடலைக் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து உறவினர்கள் போராடி வருவதால், ஆடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
உயிரிழந்த விஜயகுமாருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரது மனைவி திவ்யா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த விஜயகுமாரின் மறைவு அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
