தீபாவளியன்று மதுரையில் தடம் புரண்ட ரயில்.... ஊழியர்களின் கவனக்குறைவே காரணம்?! விசாரணையில் அதிர்ச்சி!
சென்னையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட போடி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 31ம் தேதி தீபாவளியன்று திடீரென மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. எனினும் தமிழகத்திலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருவது பயணிகளிடையே அச்சத்தை எழுப்பி வருகிறது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்த விசாரணையில் ஊழியர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் போடி எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் கரூர், மதுரை வழியாக போடி சென்றடைகிறது. இதில் மதுரை வரை மின்சார என்ஜினும் அதன் பின்னர் போடி வரை டீசல் என்ஜினும் கொண்டு இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு வழக்கம்போல சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் காலை 7.15 மணிக்கு மதுரை சென்றடைந்ததும் டீசல் என்ஜின் மாற்றப்பட்டு, 7.36 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது. அப்போது என்ஜினுக்கு பின்புறம் இருந்த ரயில் மேலாளர் அறையுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் சக்கரம் திடீரென தடம் புரண்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளின் விசாரணையில், விபத்திற்கு ஊழியர்களின் கவனக்குறைவே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. ரயிலில் என்ஜின் மாற்றும் போது பெட்டிகள் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு அடியில் கட்டை வைத்து முட்டு கொடுக்கப்படும். என்ஜின் மாற்றப்பட்ட பிறகு இந்த கட்டையை அகற்றிவிடுவார்கள். ஆனால் அன்றைய தினம் இந்த கட்டை அகற்றப்படாமல் இருந்ததால் ரயில் பெட்டி தடம்புரண்டுள்ளது.
ஏன் கட்டையை அகற்றவில்லை என்கிற கேள்விக்கு, "நாங்கள் கட்டையை அகற்றுவதற்கு முன்பே லோகோ பைலட் ரயிலை இயக்கிவிட்டார்" என்று கூறியுள்ளனர். பதிலுக்கு லோகோ பைலட், "கட்டை அகற்றப்பட்டது குறித்து முறையாக தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
இரு தரப்பினரும் ஒருவரை மற்றொருவர் குற்றம் கூறி வந்த நிலையில், இருதரப்பினரின் விளக்கத்தையும் அதிகாரிகள் பதிவு செய்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சொல்லப்படுகிறது. ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அடிக்கடி தமிழகத்தில் ரயில் விபத்திற்காக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
